வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! - ராமதாஸ்

கடந்த 2021-ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக அரசு வன்னியர் சமூகத்திற்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அறிவித்தது.
ராமதாஸ்
Published on

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் சமூக நீதி என்பது வெறும் அரசியல் முழக்கமாக இல்லாமல், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் செயல்திட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவில் இடம்பெற்றுள்ள வன்னியர் சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலை குறித்து அரசு துல்லியமான தரவுகளை சேகரித்து, அதற்கேற்ப உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

69% இடஒதுக்கீடு

தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டு முறையில், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவிற்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த 20% இடஒதுக்கீட்டின் பலனை பல்வேறு சமூகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. இந்நிலையில், மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட வன்னியர் சமூகத்திற்கு தனி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

உள்ஒதுக்கீடு

கடந்த 2021-ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக அரசு வன்னியர் சமூகத்திற்கு 10.5% உள்ஒதுக்கீட்டை அறிவித்தது. ஆனால், அந்த ஒதுக்கீடு போதுமான சமூக தரவுகளின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்று கூறி, இந்திய உச்சநீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. நீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்து கூறவில்லை; மாறாக, துல்லியமான புள்ளிவிவரங்கள் மற்றும் சமூக ஆய்வுகள் இல்லாமல் வழங்கப்பட்டதே சட்டரீதியாக நிலைக்காது என்று குறிப்பிட்டது. இன்று தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டுவதாகக் கூறும் அனைத்து அரசியல் இயக்கங்களும், குறிப்பாக சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் தலைமைகளும், ஆளும் கட்சியும் வன்னியர் சமூகத்தின் நிலையை உணர வேண்டும். தேசிய மாதிரி கணக்கெடுப்புகள் மற்றும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், கிராமப்புறங்களில் வாழும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் இன்னும் குறைந்த வருமான நிலையில் உள்ளன. உயர்கல்வி, அரசு வேலைவாய்ப்பு, தொழில்நுட்பக் கல்வி மற்றும் உயர்நிலை நிர்வாகப் பணிகளில்அவர்களின் பிரதிநிதித்துவம் மக்கள்தொகை விகிதத்திற்கேற்ப இல்லை என்பது பல்வேறு சமூக அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வரும் கருத்தாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு

தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உடனடியாக மாநில அளவில் முழுமையான சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்த வேண்டும். தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வருகின்ற தமிழக வெற்றிக் கழகமானது அவர்களின் தேர்தல் வாக்குறுதியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது ஆகவே அவற்றை இந்த சட்டமன்ற தொடரிலேயே அமல்படுத்த வேண்டியது அவசியமாகும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி ஒவ்வொரு சமூகத்தின் மக்கள்தொகை, கல்வி நிலை, வேலைவாய்ப்பு நிலை, நிலஉடைமை, வருமானம் மற்றும் அரசு பணிகளில் உள்ள பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அனைத்து புள்ளி விவரங்களும் வெளிப்படையாக வெளியிடப்பட வேண்டும்.

சமூக நீதி

அந்த தரவுகளின் அடிப்படையில், வன்னியர் சமூகத்திற்கு உரிய உள்ஒதுக்கீடு எவ்வளவு தேவை என்பதை அறிவியல் ரீதியாக தீர்மானிக்க வேண்டும். இடைக்கால ஏற்பாடாக, முன்னர் வழங்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டை மீண்டும் சட்டரீதியாக வழங்குவதற்கான வழிமுறைகளை அரசு ஆராய வேண்டும். இதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களின் உண்மையான சமூக மற்றும் கல்விப் பின்தங்கிய நிலையை கணக்கில் கொண்டு இடஒதுக்கீட்டு கொள்கைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். சமூக நீதி என்பது எந்த ஒரு சமூகத்திற்கும் எதிரானது அல்ல; மாறாக ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் பின்தங்கிய நிலைக்கேற்ப உரிய வாய்ப்புகளை வழங்குவதே உண்மையான சமூக நீதி ஆகும். எனவே, வன்னியர் சமூகத்திற்கான உரிய இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கும், தமிழகத்தின் அனைத்து சமூகங்களுக்கும் சமமான முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com