புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்யும் மத்திய குழு சென்னை வந்தது

மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட உள்ளனர்.
Published on

சென்னை,

வங்கக்கடலில் உருவான 'மிக்ஜம்' புயல் காரணமாக, வடகடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதடைந்தன.

வெள்ள சேதத்தை பார்வையிடுவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த 7-ந் தேதி சென்னை வந்தார். ஹெலிகாப்டரில் சென்று வெள்ள சேதத்தை பார்வையிட்ட அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்தார். இதனிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்கட்ட நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார். மத்திய அரசும் மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.450 கோடியை வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில், புயல் மழை வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு தற்போது சென்னை வந்துள்ளது. இதன்படி ஆய்வு குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி, ஷிவ் ஹரே, திரேன் சிங் ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். மேலும் பாவ்யா, ரங்கநாத் ஆகியோர் டெல்லியில் இருந்து இன்று காலை வருவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குழுவில் மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை (செலவினம்), மின்சாரத்துறை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருக்கின்றனர். மத்திய குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை 2 பிரிவாக பிரிந்து வெள்ளச்சேத பகுதிகளை பார்வையிட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல உள்ளன

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com