

ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் நாள் அன்று பாரம்பரியமாக பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கம். அதன்படி ராமேசுவரம் கோவிலில் நேற்று சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதற்காக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவிலின் குருக்கள் உதயகுமார் வருகிற ஓராண்டில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து பஞ்சாங்கத்தில் இடம் பெற்று இருந்த தகவல்களை வாசித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க போட்டி போட்டு வரும். எதிர்க்கட்சிகளுக்கு ராஜயோகம் அமையும். பல கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நேரும். ஆளுங்கட்சி மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு அதிகரிக்கும். இதனால் பல சரிவுகளை சந்திக்க வேண்டி வரும்.
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களின் விற்பனை நிலையில்லாத வியாபாரமாக அமையும். வெங்காயம், தக்காளி, சிறு தானியங்களின் விலை குறையும். பூண்டு, ஏலக்காய், மிளகாய், தேங்காய் போன்ற பொருட்கள் விளைச்சல் அதிகரிப்பதுடன் விலை வீழ்ச்சி அடையும். எல்லையோரத்தில் வெடி குண்டு தாக்குதல் அடிக்கடி நடக்க வாய்ப்புகள் உள்ளது.
வெளிநாட்டில் சிறுபான்மையினர் அதிகமாக பாதிக்கப்படுவர். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்க நேரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். சித்தா, ஆயுர்வேதம் மருத்துவத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் இருக்காது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது.
மத்தியில் தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் முக்கிய பதவி வகிக்க நேரும். அமெரிக்காவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும். இந்தியாவில் பல நிறுவனங்கள் பல சாப்ட்வேர்களை கண்டுபிடித்து உலகத்துக்கு சமர்ப்பிக்க நேரும். மேற்கண்ட பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றிருந்தன.