

சென்னை
பொது வேட்பாளர் விவகாரத்தில், எவனிடமும் போய் நின்று ஆதரவு கேட்க மாட்டேன் என சீமான் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 107-ல் இருந்து 109 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், த.வெ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகளும் தற்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளன. இந்த சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ளார். அம்பை இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மற்ற கட்சிகள் உங்களை ஆதரித்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் சீமானிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சீமான், சோறு கிடைக்காதா என்ற நிலையில் பசியில் இருக்கிறோம். அப்போது பிரியாணி தருகிறேன் என்று சொன்னால், வேண்டாம் என்று கூறுவார்களா? நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என்றார்.
இதனால், அம்பை தொகுதியில் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சீமான் 2016 சட்டசபை தேர்தலில் கடலூர் தொகுதியிலும், 2021 சட்டசபை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். அடுத்து, காரைக்குடி தொகுதியில் அவர் அடைந்த தோல்வியின் மூலம் ஹாட்ரிக் தோல்வியை அவர் சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினிடம், சீமானுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிவிக்கட்டும். அதன்பிறகு பேசலாம் என்று டுவிஸ்ட் வைத்து பேசினார்.
சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?, இதுவரை தி.மு.க., அ.தி.மு.க.வையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அந்த கட்சிக்காரர்கள் எப்படி அவருக்கு ஓட்டுப்போடுவார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று பேசும்போது, இனி எதுவும் பேசுவதில்லை, செயல் தான். இனி செயல் மட்டுமே நமது அடையாளம். எவ்வளவு பெரிய கோட்டையானாலும் சின்ன சாவி துவாரத்தில் தான் திறக்கும். நமது கோட்டையை அம்பாசமுத்திரத்தில் இருந்து தான் திறக்கிறோம். சீமான் பொது வேட்பாளர் என கற்பனையாக சொல்லி வருகிறார்கள்.
எத்தனை முறை நான் தோற்றாலும் தோற்பேனே தவிர எவனிடமும் போய் நின்று, என்னை ஆதரி என கேட்க மாட்டேன் என்று பேசியுள்ளார்.