

சென்னை,
இந்திய - நியூசிலாந்து நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சென்னையிலிருந்து நியூசிலாந்திற்கு முதல் முறையாக ரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அடங்கிய சரக்கு தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகத்தின் சென்னை அலுவலகம் இந்த சிறப்பு ஏற்பாட்டை செய்திருந்தது. சென்னை அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ் இந்த முதல் சரக்கு தொகுப்பை கொடியசைத்து முறைப்படி அனுப்பி வைத்தார்.
நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த முதல் சரக்கு தொகுப்பில் ரூ. 63,78,753 மதிப்பிலான அரிய ரத்தினங்களும், ஆபரணங்களும் இடம்பெற்றிருந்தன. இந்த நகைகள் அனைத்தும் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானவை ஆகும். இந்த ஏற்றுமதி விழாவில், இந்திய ரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் முக்கிய பிரதிநிதிகளும், அரசு உயர் அதிகாரிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
விழாவில் எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் டயான் சக்தி சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய நகை உலகிற்கு புதிய கதவுகளை திறந்துவிட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியக் கைவினைஞர்களின் திறமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படும். ரத்தினம் மற்றும் ஆபரண துறைக்கு நியூசிலாந்தில் மிகப்பெரிய வர்த்தக சாத்தியக்கூறுகளும், புதிய வேலைவாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகியுள்ளன" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம், தமிழகத்திலிருந்து நியூசிலாந்திற்கு நகைகள் ஏற்றுமதி மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என வர்த்தகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.