

சென்னை,
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் கருத்தை பிரேமலதா வரவேற்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எதிர்த்தும் பேசிய வினோத சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் உள்ளன. ஆனால், நேற்றைய சட்டசபை கூட்டத்தில் இரு கட்சிகளும் நேர் எதிராக நடந்து கொண்டன.
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கருத்தை தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.செல்லசாமி எதிர்த்தார். அப்படி என்னதான் சட்டசபையில் நடந்தது. அதை தொடர்ந்து பார்ப்போம்.
தமிழக சட்டசபையில் நேற்று காவிரி நீர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அது தொடர்பான விவாதத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது:-
காவிரி நமக்கு உயிர் ஆதாரம். உணர்வு ரீதியான ஒன்று. அதனால் அதை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளிகூட இந்த அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. பெங்களூரு பயணம் குறித்து பல கருத்துகள் வந்தன.
நான் போக நினைத்தது, ஒரு வேளை இந்த பிரச்சினை தீர்க்க ஒரு சாதகமான சூழல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான். இன்றைய காலக்கட்டத்தில் பகை நாடுகளே பேசி தீர்க்கப் பார்க்கிறார்கள். பக்கத்து மாநிலத்தோடு பேசிப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன்.
அதனால்தான் அந்த முயற்சியை எடுக்க முடிவு செய்தோம். அந்த முயற்சியில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என சிலர் கேட்டார்கள். அப்படி நடந்தால், தமிழ்நாட்டு மக்களுக்காக அதையும் தாங்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஆர்.செல்லசாமி, முதல்-அமைச்சர் விஜய்யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவர், "தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகா சென்று மண்டியிட தேவையில்லை. அப்படி அவமானம் அங்கு ஏற்பட்டால், தாங்குவதற்கு தயார் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். அது சரியில்லை. அப்படியொரு அவமானம் ஏற்பட்டால், தமிழ்நாட்டின் அத்தனை மக்களுக்குமான அவமானம்" என்றார்.
பின்னர் பேசிய தே.மு.தி.க. உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சர் விஜய்யின் கருத்தை ஆதரித்து பேசினார். அவர், "காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா செல்ல முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தது சரிதான். டி.கே.சிவக்குமாரும், விஜய்யும் இருமாநிலத்தின் புதிய முதல்வர்கள். அவர்கள் சந்திந்து பேசினால் என்ன?, ஏன் தடுக்கிறீர்கள்?. முதல்-அமைச்சரின் பின்னால் தமிழகம் நிற்கிறது. முதல்-அமைச்சர் கர்நாடகா செல்லும்போது அவமரியாதை ஏற்பட்டால் என்ன செய்வது? என்கிறார்கள். அப்படி நடக்க நாங்கள் விடமாட்டோம். முதல்-அமைச்சர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால், தமிழக மக்கள் நாங்கள் சும்மா இருப்போமா?. ஒட்டுமொத்த தமிழ்நாடும் வெகுண்டெழும்" என்றார்.