வளர்ந்த பாரதம்; போதைப்பொருள் இல்லாத பாரதம்! - நயினார் நாகேந்திரன்

மக்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் பிரதமர் மோடி, தேசத்திற்கு கிடைத்த வரம் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
வளர்ந்த பாரதம்; போதைப்பொருள் இல்லாத பாரதம்! - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மனதின் குரல் நிகழ்ச்சி

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியின் இன்றைய 137-வது அத்தியாயமானது, தேசிய உணர்வு, சமூக அக்கறை, இளைஞர் நலன், பெண்கள் முன்னேற்றம், தற்சார்பு பொருளாதாரம் உள்ளிட்ட பல நல்ல தகவல்களை உள்ளடக்கிய கலவையாக இருந்தது.

தேசிய கைத்தறி தினம், சுதந்திர தினம், தேசிய விண்வெளி தினம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட நாள், பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் உள்ளிட்டவைகளை கொண்ட இந்த ஆகஸ்ட் மாதம், ஒவ்வொரு இந்திய குடிமகனின் நெஞ்சிலும் தேசிய உணர்வை விதைப்பதாகவும், “வந்தே மாதரம்” பாடல் உருவாக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் குறிப்பிட்டுப் பேசினார் நமது பாரதப் பிரதமர். மேலும், “ஹர் கர் திரங்கா” மற்றும் “சூர்யபத் திரங்கா” உள்ளிட்ட பிரசாரங்கள் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் மத்தியில் தேசப்பற்றையும் ஒற்றுமையுணர்வையும் வலுப்படுத்தி உள்ளதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் இல்லாத பாரதம்

அதுமட்டுமன்றி, இளைஞர்களின் எதிர்காலத்தையும், நமது சமூகக் கட்டமைப்பையும் முற்றிலுமாக சீர்குலைக்கும் போதைப்பொருளுக்கு எதிராக, நமது மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான, போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள்” என்ற பிரசாரத்தில், இளைஞர்கள் அதிதீவிரமாக தங்களை இணைத்துக் கொள்வதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார் நமது பாரதப் பிரதமர். அதுமட்டுமன்றி, போதைப்பொருளின் ஆபத்துக்களை எடுத்துரைத்து, போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் அனைவரும் உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், நாடு முழுவதிலுமுள்ள 35 லட்சம் பெண் தொழில் முனைவோர்கள் தங்கள் தொழில்களை மேலும் விரிவாக்க உதவும் “PM ஸ்வநிதி யோஜனா” திட்டம் குறித்தும், எந்த ஆண்டில் எந்தப் பகுதியை யார் ஆண்டார்கள் என்பதை துல்லியமாக விளக்கும் http://bharatrajya.com என்ற இணையதளம் குறித்தும் விரிவாகப் பேசிய நமது பாரதப் பிரதமர், பண்டிகை காலங்களில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதிலும், நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதிலும் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தேசத்திற்கு கிடைத்த வரம்!

மொத்தத்தில் இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியானது, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் கொண்டுள்ள அளவற்ற அன்பின் வடிகாலாக இருந்ததை நம்மால் உணர முடிந்தது. நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கி, மக்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் நரேந்திர மோடி, தேசத்திற்கு கிடைத்த வரம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com