குடும்பத்தினருடன் அளவு கடந்த பாசம்: குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய் - நெகிழ்ச்சி சம்பவம்

டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக எடுத்து வளர்த்து வந்தனர்.
குடும்பத்தினருடன் அளவு கடந்த பாசம்: குழந்தைகளை காப்பாற்ற பாம்புடன் சண்டையிட்டு உயிரைவிட்ட நாய் - நெகிழ்ச்சி சம்பவம்
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் கழுவன்தோண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்(வயது 59). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி சாந்தி. இவர்கள், தங்களது மூத்த மகன் கலைவாணன், 2-வது மகன் கணேஷ் ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக எடுத்து வந்து ''ஹேண்ட்ரி'' என்ற பெயர் வைத்து வளர்த்து வந்தனர்.

ஹேண்ட்ரியின் பாசத்தாலும், அன்பாலும் தங்களது குடும்பத்தில் ஒருவரைபோல் பாவித்து செல்வேந்திரன் குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். சுப நிகழ்ச்சிகளில் நாய் ஹேண்ட்ரியுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்வார்கள், அந்த அளவிற்கு குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடி அன்புடன் பழகி வந்துள்ளது.

இந்நிலையில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாதபோது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள முந்திரி தோப்பில் இருந்து பாம்பு ஒன்று வந்தது. இதை பார்த்த நாய் குரைத்து சத்தம் எழுப்பியதுடன், குழந்தைகளை தன் காலால் தள்ளி பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியது. பின்னர் வீட்டை நோக்கி வந்த பாம்பை உள்ளே விடாமல் அதனுடன் சண்டையிட்டு பாம்பை விரட்ட போராடியது.

அப்போது பாம்பு நாயை கடித்தது. எனினும் கவலைப்படாமல் பாம்பை நாய் கடித்து குதறியது. இதில் பாம்பு செத்தது. பாம்பின் விஷத்தால் நாய் ஹேண்ட்ரி மயங்கி விழுந்தது. இதனிடையே வெளியே சென்றிருந்த செல்வேந்திரனின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர். அப்போது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே பாம்பின் விஷத்தால் நாய் இறந்து விட்டதாக அவர்கள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் குடும்பத்தினர், குழந்தைகளை காப்பாற்றி வீர மரணம் அடைந்த நாய் ஹேண்ட்ரிக்கு பதாகை வைத்தும், சுவரொட்டிகளை ஒட்டியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள், அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு செய்து புதைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com