திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெண்களை இழிவாக பேசி வந்த போலி சாமியாருக்கு அடி-உதை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போலி சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாளுக்கு நாள் கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதற்கு இணையாக சாதுக்கள் போர்வையில் போலி சாமியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கிரிவலப்பாதையில் சாதுக்கள் போர்வையில் உள்ள போலி சாமியார்கள் பக்தர்களை தாக்குவது, அவர்களுக்கு உள்ளேயே அடித்து கொள்வது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக போலி சாமியார் ஒருவர் கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்கள், பெண்களை இழிவாக பேசுவதும், ஆளில்லாத வீடுகளுக்குள் சென்று குழந்தைகளை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரை பொதுமக்கள் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இடுக்கு பிள்ளையார் கோவில் அருகே திடீரென சிக்கிய அந்த போலி சாமியாரை பொதுமக்கள் சரமாரியாக உருட்டுக்கட்டைகளாலும், கைகளாலும் தாக்கினர். இதனால் செய்வதறியாத அவர் வலி தாங்க முடியாமல் சாலையில் அங்கும், இங்குமாக ஓடி அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து கிரிவலப் பாதையில் சாதுக்கள் என்ற பெயரில் போலி சாமியார்கள் செய்யும் அட்டகாசத்தை போலீசார் உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






