

தனுஷ்கோடி,
ராமேசுவரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதி உள்ளது. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த தனுஷ்கோடி பகுதியானது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது. சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு தினமும் ரெயில் வந்து சென்று உள்ளது. அதேபோல தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. ரெயில் நிலையம், தபால் நிலையம், துறைமுகம் என மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கிய தனுஷ்கோடி நகரம் 1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி ஏற்பட்ட புயலால் கடலில் மூழ்கியது. அதன்பின்பு அந்த நகரத்தை மீட்டெடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2015-ம் ஆண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 2017-ம் ஆண்டு அந்த சாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சாலை அமைக்கப்பட்ட பின்னர் தினமும் அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக சில வாரங்களாக கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஏற்பட்டு உள்ள கடல் அரிப்பால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம்-கம்பிப்பாடு பகுதிக்கு இடைப்பட்ட தெற்கு கடல் பகுதியில் ஏற்கனவே கடலில் மூழ்கி சேதமான தரைப்பாலம் தற்போது தெளிவாக வெளியே தெரிகிறது. கடல் நீர், மழை நீர் குழாய் வழியாக இருபுறமும் செல்லும் வகையில் சுமார் 62 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட தரைப்பாலம் தற்போது தெளிவாக வெளியே தெரிகிறது.
கடலுக்கு அடியில் மூழ்கி இருந்த தரைப்பாலம் தற்போது ஏற்பட்டு உள்ள கடல் அரிப்பின் காரணமாக கடல்நீருக்கு வெளியில் தெரிவதை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர். தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம், கடல் அரிப்பு அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்த தரைப்பாலம் வெளியே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.