காதல் கைகூடாது என நினைத்து விஷம் குடித்த சிறுமி.. 5-வது நாளில் நேர்ந்த சோகம்

காதல் திருமணம் செய்த சிறுமி காதலர் தினத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காதல் கைகூடாது என நினைத்து விஷம் குடித்த சிறுமி.. 5-வது நாளில் நேர்ந்த சோகம்
Published on

கள்ளக்குறிச்சி,

திருவண்ணாமலை மாவட்டம் தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் முத்தழகி (17). இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருமண நிச்சயதார்த்தம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் முத்தழகிக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது. இதனால் அவர், வீட்டை வீட்டு வெளியேறி தனது காதலனான காளி என்பவரை கடந்த 10-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முத்தழகிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய காதல் கணவர் காளி, இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு முத்தழகி, தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததால் கடந்த 9-ந்தேதி விஷத்தை குடித்ததாக (எலி பேஸ்ட்) தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த காளி, உடனடியாக முத்தழகியை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்தழகி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறுமிக்கு திருமணமாகி 5 நாட்களே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் முருகன் மேல் விசாரணை நடத்தி வருகிறார். தனது காதல் கைகூடாது என்று எண்ணி விஷம் குடித்த சிறுமி, அதற்கு மறுநாளே வீட்டை விட்டு வெளியேறி காதலனை மணந்து திருமண வாழ்வில் இணைந்தார். விரும்பிய காதல் கிடைத்த மகிழ்வில் தான் விஷம் குடித்ததை மறந்து இருந்த நிலையில், திருமணமான 5-வது நாளில் அவரது உயிரை அந்த விஷம் பறித்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com