காவல் மரணங்களை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காவல் மரணங்களை விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்: டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“மதுரை சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததாக புகார் – தவெக ஆட்சியில் தொடரும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.

மதுரை அனுப்பானடி அருகே பொது இடத்தை பயன்படுத்துவதில் இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக விசாரணைக்காக சிந்தாமணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பரமசிவம் உயிரிழந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றன.

கடந்த ஜூலை 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் பரமசிவம் பலத்த காயமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், சட்டத்தின் மீது நம்பிக்கையையும் அளிக்க வேண்டிய காவல்நிலையங்களில் தொடர்ந்து அரங்கேறும் இதுபோன்ற காவல் மரணங்கள், காவல்துறையின் மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

எனவே, சிந்தாமணி காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்திடுவதோடு, தொடர்ந்து அதிகரிக்கும் காவல் மரணங்கள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com