தமிழ்நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! - எல்.முருகன்

சென்னையின் பொதுப் போக்குவரத்து வசதிகள் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! - எல்.முருகன்
Published on: 

சென்னை,

பிரதமரின் வழிகாட்டுதலின்படி, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கி, அதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி – வடபழனி இடையிலான இரண்டாம் கட்ட வழித்தடப் பகுதியைத் திறந்து வைத்து, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். இதன் மூலம் சென்னையின் பொதுப் போக்குவரத்து வசதிகள் மேலும் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளன.

மேலும், சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தும் தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வலுசேர்த்துள்ளார்.

நெடுஞ்சாலைகள், ரெயில்வே, துறைமுகங்கள் மற்றும் பெட்ரோலியத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மாநிலங்களை வலிமையானவையாக மாற்றுவதன் மூலம் வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன், தமிழக மக்களுக்குச் சேவையாற்றுவதில் தனது உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.

புதிய சாதனைகளைப் படைக்கும் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்த பிரதமர், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் மத்திய அரசு வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

பிரதமரின் வழிகாட்டுதலின்படி, வளர்ச்சியடைந்த தமிழகத்தை உருவாக்கி, அதன் மூலம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com