ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சு: அமைச்சர் வன்னி அரசு கண்டனம்

திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை விசிக கண்டிக்கிறது என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
வன்னி அரசு கண்டனம்
Published on

சென்னை,

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆ.ராசா சர்ச்சை பேச்சு

சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆ. ராசாவின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

உரையை கேட்டால்..

கடமை,கண்ணியம், கட்டுப்பாடு முழக்கத்தை முன் வைத்த திமுக இப்போது வன்மம், வெறுப்பு மற்றும் ஆற்றாமையால் நிரம்பிக்கொண்டு இருக்கிறதோ என அய்யம் எழுகிறது.

திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் மட்டுமல்ல; முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணி ஆற்றியவர் அண்ணன் ஆ.ராசா. இந்து அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் அண்ணன் சேகர் பாபு ஆகிய இருவரின் இந்த உரையை கேட்டால் அந்த ஆற்றாமை புரியும்.

“எனக்கு சந்தேகம் இருக்கு நீ யாருக்கு பிறந்த?” என கேட்பது பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா?

அதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணியார் தமிழச்சி, ஆ.ராசா அந்த கேள்வி எழுப்பும் போது எந்தவித அசைவும் இல்லாமல் தலை கவிழ்ந்தவாறு இருப்பார்.

என்ன வித்தியாசம்?

முதல்-அமைச்சரை ஓடுகாலி என சேகர்பாபு உளறியதை ‘பீப்’போட்டு அவமானத்தை மறைக்கிறது கலைஞர் தொலைக்காட்சி. திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி குறித்து பாஜகவை சார்ந்த எச்.ராஜாவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமானும் மிக இழிவாக பேசிய போது, கண்டித்த விடுதலைச்சிறுத்தைகள் இப்போது, திமுக பேச்சாளர்களின் இந்த இழிவான உரையை கண்டிக்கிறது.

திமுக ஆ. ராசா, பாஜக எச்.ராஜா, என்ன வித்தியாசம் இருக்கிறது?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com