பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பு

பெண்ணை தாக்கிய வழக்கில் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர்.
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பு
Published on

சென்னை,

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பா.ஜனதா மாவட்ட நிர்வாகி ஆவார். இவரது சகோதரி தேவி கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த 21-ந் தேதி அன்று இரவு, நான் எனது சகோதரி ஆண்டாள் வீட்டில் இருந்தேன். அப்போது, பா.ஜனதா மாநில நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தூண்டுதலின்பேரில், அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர், எங்கள் வீட்டில் ரகளையில் ஈடுபட்டனர். எனது தலையில் ரத்த காயம் ஏற்பட்டது.

கடந்த 19-ந் தேதி, பிரதமர் மோடி சென்னை வந்தபோது, ஆட்கள் அழைத்து செல்வது தொடர்பாக எனது சகோதரி ஆண்டாளுக்கும், நிவேதா என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. அதையொட்டிதான், அமர்பிரதாத் ரெட்டி தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் அடிப்படையில், அமர்பிரசாத் ரெட்டி, அவரது கார் டிரைவர் ஸ்ரீதர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், கார் டிரைவர் ஸ்ரீதரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அமர்பிரசாத் ரெட்டி கடலூரில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி தனிப்படை போலீசார் அவரை பிடிக்க கடலூருக்கு விரைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com