நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

நாட்டறம்பள்ளி அருகே நார் தொழிற்சாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
Published on

நார் தொழிற்சாலை

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் அதே பகுதியில் கடந்த 3 வருடங்களாக நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

இந்த தொழிற்சாலையில் வடமாநிலத்தினர் உள்ளிட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் நார் தொழிற்சாலை திடீரென தீ பற்றி மளமளவென எரிந்தது. இதனால் உரிமையாளர் உடனடியாக நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

3 மணி நேரம் போராடி அணைத்தனர்

அதன்பேரில் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் வாகனமும் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதனால் நார் தொழிற்சாலையில் இருந்த நார் மற்றும் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் தொழிலாளிகள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.நார் தொழிற்சாலையில் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவத்தால் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com