சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை

சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று காலை 11.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (04.09.2026) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 15 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

முதல்-அமைச்சர் சந்திக்க மறுப்பது ஏன்?

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதி களான தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 15 நாட்களாகப் போராடி வருகின்றனர். முன் எதிர்க் கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைத் தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சந்தித்துப் பேசிய இன்றைய முதல்-அமைச்சர் இப்போது அவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?

முந்தைய அமர்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றார். ஆனால், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமைச்சர்களோ அல்லது முதல்வரோ நேரடியாகச் சென்று போராட்டக் களத்தில் உள்ள தொழிலாளர்களைச் சந்திக்காதது ஏன்? கோரிக்கைகளை முதலமைச்சர் எப்போது நிறைவேற்றுவார்?” என்று கேள்வி எழுப்பினார்.

கடுமையான நிதி நெருக்கடி

அதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் ராஜ்மோகன், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் சிரமங்களை அரசு நன்கு உணர்ந்துள்ளது. அவர்களின் பல கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால், பிரதான கோரிக்கைகளில் நிர்வாகச் சிக்கல்களுடன் கடுமையான நிதி நெருக்கடியும் உள்ளது. தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை எனது அறைக்கு இருமுறை அழைத்து தலா மூன்றரை மணி நேரம் விரிவாகப் பேசியுள்ளேன். முந்தைய ஆட்சியில் தொழிலாளர்கள் 100 முதல் 150 நாட்கள் வரை போராடினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,” என்றார்.

வெகு விரைவில்

அமைச்சரின் பதிலுக்குக் குறுக்கிட் டுப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “எங்கள் ஆட்சிக் காலத்தில் அன்றைய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முந்தைய ஆட்சியில் 100 நாட்கள் போராட்டம் நடந்ததாகச் சுட்டிக்காட்டும் அரசு, தற்போதும் 100 நாட்கள் கடக்கும் வரை காத்திருக்கப் போகிறதா?” என வினவினார்.

இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், அரசு ஆவணங்கள் அனைத்தும் தயாராகி விட்டதால் வெகு விரைவில் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகளுக்கு நல்வழி பிறக்கும் என்று உறுதி அளித்திருந்தார்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதன்படி அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com