

சென்னை,
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், கீழ்பாக்கம், மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி (19 வயது). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகி வந்தார். அந்த சிறுமியை நேரில் சந்திப்பதற்காக அரக்கோணத்திலிருந்து அடிக்கடி சென்னை வந்த ஆண்டனி, திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை ஏமாற்றியதாகவும், சிறுமி மறுத்தபோதும் கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், சிறுமியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் சிறுமியின் உறவினருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்ட போக்சோ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து ஆண்டனிக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிகலா லோகநாதன் ஆஜராகி வாதாடினார்.