

நீலகிரி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சபாரி சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனத்திற்கு முன்பாக, புலி ஒன்று கம்பீரமாக சாலையைக் கடந்து சென்ற அரிய காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாள்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகை தருகின்றனர். இவர்கள் வனத்துறையின் பிரத்யேக வாகனங்கள் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சபாரி சென்று, அங்குள்ள வனவிலங்குகளைக் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில், நேற்று (புதன்கிழமை) மாலையில் மாயார் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சபாரி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையின் ஓரத்தில் இருந்த புதர்களுக்கு நடுவிலிருந்து மாபெரும் புலி ஒன்று திடீரென வெளியே வந்தது. அந்த புலி சற்றும் அச்சமின்றி, மிகக் கம்பீரமான நடையுடன் சாலையைக் கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது.
புலியைக் கண்டதும் சபாரி வாகன ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் இந்த அரிய மற்றும் அழகிய காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டனர். முதுமலை காப்பகத்தில் யானை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகளைப் பார்ப்பது சாதாரண ஒன்றாக இருந்தாலும், அடர்ந்த காட்டில் புலியை இவ்வளவு அருகில் மிகத் தெளிவாக பார்ப்பது மிகவும் அரிதானது என்பதால், இந்த சபாரி பயணம் தங்களுக்கு ஒரு மறக்க முடியாத பரவச அனுபவமாக அமைந்ததாக சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பொதுவாக புலிகள் மனித நடமாட்டத்தைக் கண்டால் ஒதுங்கி செல்லும் குணம் கொண்டவை. ஆனால், இந்த வீடியோவில் புலி மிகவும் நிதானமாக சாலையைக் கடக்கும் காட்சிகள் பார்ப்போரைக் கவர்ந்துள்ளன. இந்த கம்பீர புலியின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.