பெங்களூரு அக்னிபாத் பயிற்சி முகாமில் வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர், இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட அக்னிவீர் தேர்வில் வெற்றி பெற்று, பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பயிற்சி மையத்தில் தீவிர ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு.
Published on: 

தூத்துக்குடி,

பெங்களூருவில் இந்திய ராணுவத்தின் அக்னிபாத் பயிற்சியின்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

பெங்களூரில் தீவிர ராணுவ பயிற்சி

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகேயுள்ள நாகம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த மறைந்த கந்தசாமியின் மகன் கொம்புராஜ் (வயது 20). இவர் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட அக்னிவீர் தேர்வில் வெற்றி பெற்று, கடந்த 23.6.2026 முதல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் பயிற்சி மையத்தில் தீவிர ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

தூத்துக்குடி வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

இந்த நிலையில், பயிற்சி மையத்தில் வழக்கமான தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கொம்புராஜ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட சக வீரர்களும் அதிகாரிகளும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக ராணுவப் பயிற்சி மையத்தின் சார்பில் நாகம்பட்டியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி

அதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உடற்கூறாய்வு நிறைவடைந்த பின்னர், கொம்புராஜின் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரான பசுவந்தனை அருகிலுள்ள நாகம்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து அவரது உடல் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 20 வயதே ஆன ராணுவப் பயிற்சி வீரரின் மறைவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com