வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்தானது பெரும் ஏமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும்

வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்தது பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் ரத்தானது பெரும் ஏமாற்றம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களின் சமூக, கல்வி மேம்பாட்டிற்காக போராடி பெறப்பட்ட இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான 7 வினாக்களுக்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

ஏற்றுக்கொள்ள முடியாது

தமிழ்நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட இஸ்லாமியர்கள் உள் இடஒதுக்கீடு, அருந்ததியர் உள் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு சென்னை ஐகோர்ட்டோ, சுப்ரீம் கோர்ட்டோ தடை விதிக்காத நிலையில், வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு மட்டும் சென்னை ஐகோர்ட்டு தடை விதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கிலும் இதே வாதங்களைத்தான் சமூகநீதிக்கு எதிரான சக்திகள் முன்வைத்தன. ஆனால், அந்த வழக்கில் 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு அந்த வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை; 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து விட்டது. ஆனால், இப்போது ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் தீங்கு.

மேல்முறையீடு

வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அதன் அடிப்படையில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பில் சேர்ந்துள்ளனர். அவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், பிற பாதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, அவர்களின் நலன்களையும், சமூகநீதியையும் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால வேகத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைவருக்கும் பாதிப்பு

சென்னை ஐகோர்ட்டு எழுப்பியுள்ள வினாக்கள் சமூகநீதிக்கு பாதகமானவை. அவற்றின் அடிப்படையில் தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் உள்ள அனைத்து பிரிவு இடஒதுக்கீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அந்த வினாக்களுக்கான விடைகளை வலிமையாக தயாரிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு.

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்து சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com