திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து - தடுப்புச்சுவரில் கார் மோதல்; முதியவர் பலி

நீலாங்கரையில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். உடன் பயணம் செய்த மனைவி, மகள் படுகாயமடைந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து - தடுப்புச்சுவரில் கார் மோதல்; முதியவர் பலி
Published on

சென்னையை அடுத்த பாலவாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 60). இவரது மனைவி செல்வி (55). மகள் புவனா (25). இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிதம்பரத்தில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று விட்டு பின்னர், வீடு திரும்பி கொண்டிருந்தனர். மதுரவாயல் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (29) என்பவர் காரை ஓட்டி வந்தார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நீலாங்கரை அருகே கார் வந்த போது, டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலையின் இடது புறத்தில் உள்ள தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதினார்.

இதில் திருநாவுக்கரசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்விக்கு கால் முறிவு ஏற்பட்டது. புவனாவிற்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த செல்வி, புவனா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த திருநாவுக்கரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com