

புதுக்கோட்டை,
மின்வெட்டு காரணமாக கீரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபத்தில் காயமடைந்தவ ருக்கு 'செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேபோல் இரவிலும் மின்வெட்டு தொடர்கிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிறு, குறு தொழில்களும் முடங்கி உள்ளது.
இந்த நிலையில் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் இல்லை. இதனால் அங்கிருந்தவர்கள் சிகிச்சை அளிக்க என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர். இதையடுத்து காயமடைந்த வருக்கு நர்சுகள் 'செல்போன் டார்ச்' வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து ஆலங்குடி பகுதியில் மின் வெட்டை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.