மீன் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம் - மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவர் பலி

மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் உள்ள மின் மோட்டாரை வெளியே எடுத்தார்.
மின்சாரம் தாக்கி
Published on

கோவை,

கோவையை அடுத்த பேரூர் அருகே அண்ணா நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 38). இவருடைய மனைவி அங்கம்மாள் (35), இவர்களது மகன் விஷ்வா (13). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு.

சுண்டக்காமுத்தூரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்வதற்கு தயாராகி வந்தார். விஷ்வாவுக்கு மீன் வளர்ப்பதில் ஆர்வம். இதனால் அவர் தன்னுடைய வீட்டில் மீன்தொட்டி வைத்து அதில் மீன்களை வளர்த்து வந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

இந்தநிலையில் நேற்று காலை தூங்கி எழுந்ததும் விஷ்வா மீன்தொட்டியை பார்த்தார். அப்போது தொட்டி கொஞ்சம் அசுத்தமாக இருந்தது. இதனால் மீன்தொட்டியை சுத்தம் செய்து மீன்களுக்கு இரைபோட முடிவு செய்தார். மீன்தொட்டியை சுத்தம் செய்வதற்கு முன்பாக விஷ்வா அதன் சுவிட்ச்சை அணைக்க மறந்து விட்டதாக தெரிகிறது. மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அவர் தொட்டிக்குள் உள்ள மின் மோட்டாரை வெளியே எடுத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு அலறியபடி கீழே விழுந்தார். அவரது சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் விஷ்வா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com