

சென்னை,
ஆந்திராவில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பிய வாலிபர், ஊத்துக்கோட்டை அருகே லாரி மோதி உயிரிழந்தார்.
சென்னை அயனாவரம், பி.வி. தெருவைச் சேர்ந்த தனுஷ் (27), தனது நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று ஆந்திர மாநிலம் நகரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். நிகழ்ச்சி முடிந்து இரவு சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் பைபாஸ் சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தனுஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தனுஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பெண்ணாலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.