சட்டமன்ற விதிப்படி தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும்: அமைச்சர் வன்னி அரசு

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான பதவி உயர்வு குறித்தும் பேசப்பட்டுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
சட்டமன்ற விதிப்படி தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாட வேண்டும்: அமைச்சர் வன்னி அரசு
Published on

சென்னை,

சென்னையில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் புதிய உறுப்பினர்களாகிய தங்களுக்கு அவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மற்றும் விவாதங்களில் எவ்வாறு கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

முன்னாள் நீதியரசர் கே.என். பாட்ஷா அவர்களின் பரிந்துரையை ஏற்று ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்பதற்காகத் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் மனைப்பட்டா இல்லாத மக்களுக்கு அது கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான 164-ஏ பிரிவின் கீழ் பதவி உயர்வு குறித்தும் பேசப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகச் சிறையிலுள்ள 22 இஸ்லாமிய சிறைவாசிகளை சட்டத்திற்கு உட்பட்டு விடுதலை செய்ய வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினோம். இக்கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கவனமுடன் கேட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நாளை கவர்னர் உரையுடன் சட்டமன்றம் தொடங்க உள்ள நிலையில் சட்டப்பேரவை விதி எண் 176-ன் படி கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்ற விதிப்படியே அனைத்தும் நடக்கும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மாற்றுக்கருத்து இல்லை. தமிழ் தாய் வாழ்த்துதான் முதலில் இருக்க வேண்டும் என்பது விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com