மத்திய அரசின் பால் புரஸ்கார் விருதுக்கு சாதனை குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு 'பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்' விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது என தூத்துக்குடி கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
பால் புரஸ்கார் விருதுக்கு சாதனை குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்
Published on

தூத்துக்குடி,

மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்' விருதுக்கு தகுதியான தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

5 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கு 'பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்' விருது வழங்கப்பட்டு வருகிறது. வீரதீர செயல்கள், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு ஆகிய துறைகளில் தனித்திறன் மற்றும் சாதனை படைத்த 5 முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.

ஜூலை 15-ம் தேதிக்குள் இணைய முகவரியில் பதிவு

2026-ம் ஆண்டிற்கான விருதுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://awards.gov.in என்ற முகவரியில் வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் தங்களது விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் தகவல்

இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்தவுடன், அதன் விபரங்களை "மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 176, முத்துசுரபி கட்டிடம், மணிநகர், பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி- 628003" என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்தில் நேரில் அல்லது 0461-2331188 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படவுள்ளதால், இதற்கான இறுதி சமர்ப்பிப்பு கால அவகாசம் வரும் ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com