தவெக நிர்வாகிகளின் அடாவடித்தனங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வேல்முருகன்

தவெகவினர் ஆய்வு என்ற பெயரில் தமிழகத்தை கதிகலங்க வைப்பதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வேல்முருகன்
Published on

சென்னை,

எதிர்கட்சிகளை தீய சக்தி, தீர்ந்துபோன சக்தி என எள்ளி நகையாடும் முதல்-அமைச்சர் விஜய், தன் கட்சி நிர்வாகிகளின் அடாவடித்தனம் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

நிர்வாகிகள் அத்துமீறல்

எதிர்கட்சிகளை “தீய சக்தி”, “தீர்ந்துபோன சக்தி” எனச் சொல்லும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தன் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல், மோசடி மற்றும் அடாவடித்தனங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் (தவெக) பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், தவெக நிர்வாகிகள் “ஆய்வு” என்ற பெயரில் தமிழகத்தை கதிகலங்க வைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அடாவடித்தனம், மாமூல் வசூல், மோசடி என நாள்தோறும் சட்டத்துக்கு புறம்பான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஆய்வுகள்

•தென்காசி மாவட்டம் - சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை: தவெக நிர்வாகி வாசுதேவி சிலருடன் சென்று மருத்துவமனையில் “ஆய்வு” என்ற பெயரில் தலையிட்டார்.

•கன்னியாகுமரி மாவட்டம் - கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகம்: தவெக நிர்வாகிகள் அலுவலகத்துக்குள் நுழைந்து முன்னாள் முதல்-அமைச்சரின் புகைப்படத்தை அகற்றி, அதை வீடியோ மற்றும் ரீல்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

•ஈரோடு மேற்கு தொகுதி: தவெக எம்.எல்.ஏ. ஆனந்த் மோகன் மற்றும் அவரது சகோதரி, மாவட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பான கோப்புகளை எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு கொண்டு வருமாறு காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியிடம் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

•முதல்-அமைச்சரின் ஆஸ்தான ஜோதிடர்: முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி பண்டிட் “வெற்றிவேலை (அரசியல்)” பிரிவு சிறப்பு பணியாளர் அலுவலராக நியமிக்கப்பட்டார். பின்னர் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

•வேலூர் மாவட்டம் - கணியம்பாடி: தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாதம் ₹1 லட்சம் மாமூல் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து உள்ளூர் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

•கும்பகோணம் - அம்மன் திருவிழா: அமைச்சர் வினோத் வருகைக்காக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றிய காவலர் தேவநாதனை தவெக நிர்வாகிகள் அருண் மற்றும் காளி ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

•ராமநாதபுரம் மாவட்டம் - கமுதி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்களின் சாவிகளை வழங்க முயன்ற அதிகாரிகளிடமிருந்து சாவிகளைப் பிடுங்கிய ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன், அதை ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

•தேனி ஆட்சியர் அலுவலகம்: தவெக நிர்வாகி என அறிமுகப்படுத்திக் கொண்ட அஜிதா தெய்வேந்திரன், கலெக்டருக்கு பூங்கொத்து கொடுத்து கட்சி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்ததை ரீல்ஸ் வடிவில் வெளியிட்டார்.

மோசடி

•சென்னை - படப்பை: அமைச்சர் தென்னரசு பெயரைச் சொல்லி அரசு வீடு வாங்கித் தருவதாகக் கூறி முதியவர் விஸ்வநாதனிடம் ரூ. 9 லட்சம் பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி பொறுப்பாளர் கலைவாணி மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் விஸ்வநாதன் தற்கொலை செய்து கொண்டார்.

தற்போது, தூத்துக்குடி மாவட்டம், வழவல்லான் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி ராஜா, தன் மனைவி பொன் தெய்வம் பெயரில் உள்ள வீட்டு ஆவணங்களை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் அடமானம் வைத்து ரூ.72 லட்சம் கடன் பெற்றார். கடனை கட்டத் தவறியதால் வங்கி வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து பிச்சிவளையைச் சேர்ந்த கோபியிடம் அந்த இடத்தை ரூ.90 லட்சத்துக்கு விற்பனை பேசி பணம் பெற்று வங்கிக் கடனை அடைத்தார். ஆனால் சொத்தை தன் பெயருக்கு எழுதித் தர மறுத்தார். இதனால் கோபி தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதன் பேரில் ராஜா மற்றும் அவரது மனைவி பொன் தெய்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

எதிர்கட்சிகளை “தீய சக்தி”, “தீர்ந்துபோன சக்தி” என எள்ளி நகையாடும் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், தன் கட்சி நிர்வாகிகளின் அத்துமீறல், மோசடி மற்றும் அடாவடித்தனங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com