‘தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டவர் நடிகர் அஜித்’ - அமைச்சர் ராஜ்மோகன்

எல்லா துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஏற்படுத்துவார் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
‘தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டவர் நடிகர் அஜித்’ - அமைச்சர் ராஜ்மோகன்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, விளையாட்டு சுற்றுலாவையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப் புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும் என்று சட்டசபையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.

பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, மற்றும் பார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும் என்று முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்-அமைச்சருக்கு விஜய்க்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்தது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

“முதல்-அமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் நன்றி தெரிவித்துள்ளார். இது விளையாட்டுத்துறையின் மீது அவருக்கு இருக்கும் ஈடுபாட்டை காட்டுகிறது. அவர் விளையாட்டுத்துறையிலும் தனக்கென்று தனி பாதையை வகுத்துக் கொண்டவர். அவருக்கு நாங்களும் நெஞ்சார்ந்த நன்றியை தெரித்துக் கொள்கிறோம்.

அவர் ஆசைப்பட்டபடி விளையாட்டுத்துறை மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் பல்வேறு முன்னேற்றங்களை தமிழக முதல்-அமைச்சர் விஜய் ஏற்படுத்துவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com