

சென்னை,
சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் வாக்களித்த விவகாரத்தில் குற்றப்பதிவு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான உரிய விசாரணையை நடத்த வேண்டி உள்ளது. எனவே அதில் காலதாமதம் ஆகலாம்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.
தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.
அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.
விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப் பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை.
நாங்கள் பரிந்துரைத்திருந்த 10 வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்த அறிவிப்பை மத்திய தேர்தல் கமிஷன் இன்னும் அனுப்பவில்லை. இவை தவிர, வேறு வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றியும் ஆணையம் ஆலோசிக்கலாம்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் இடையில் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் தற்போது ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இணைத்து அவர்கள் ஒவ்வொன்றாக சரிபார்க்க வேண்டும். எனவே இதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.
பொன்பரப்பி விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை வந்துள்ளது. அங்கு தேர்தல் பார்வையாளர்கள் இருந்த நேரத்தில் யாருமே புகார் அளிக்கவில்லை. எனவே அங்கு எல்லாமே சரியாகத்தான் நடந்துள்ளது என்று அறிக்கையில் கூறியிருக் கிறார்.
மறு வாக்குப்பதிவு கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அங்கு டைரி சரிபார்க்கப்பட்டபோது தேர்தல் பார்வையாளர்களுடன் திருமாவளவன் அங்கிருந்ததாகவும், அப்போது அவர் எதையும் தெரிவிக்கவில்லை என்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போதே அவர் கோரிக்கை அளித்திருந்தால், நாங்கள் பரிந்துரைத்திருக்கும் 10 வாக்குச்சாவடிகளுடன் அதையும் இணைத்திருக்க முடியும். மேலும், அந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்கு சதவீதத்தை கவனித்தால், அது மற்ற வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு சமமாகத்தான் காணப்படுகிறது.
முதல்-அமைச்சர், அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். இன்னும் அங்கிருந்து பதில் வரவில்லை. எனவே அதற்கு தடை நீடிக்கிறது.
3 எம்.எல்.ஏ.க்கள் மீது அரசு தலை மைக் கொறடா புகார் கொடுத்த விவகாரத்தில், தேர்தல் நடத்தை விதி மீறப்பட்டுள்ளதாக எந்தக் கட்சியும் புகார் அளிக்கவில்லை. புகார் கொடுத்தால் பார்க்கலாம். ஆனால் அரசியல் கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிட தடையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.