

சென்னை,
தமிழ்நாட்டில் பிளஸ்-2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் பலரின் முதல் கனவு மருத்துவப் படிப்பாகும். கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதுதான். முதல்-அமைச்சர் விஜய்யின் நிலைப்பாடும் அதுதான். அதனால்தான், த.வெ.க. ஆட்சி அமைத்து 100 நாட்களுக்குள் சட்டசபையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் பேசுகையில், மருத்துவக் கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கானதாக இருக்கக்கூடாது என்றும், நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைகின்றன என்றும் கூறினார். மேலும், சமூகத்தில் சமநிலையான கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டது என்றும், நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் அவர் பேசினார்.
ஆக, நீட் தேர்வு வேண்டவே வேண்டாம். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையாக உள்ளது. என்றாலும், நீட் தேர்வு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி நடைபெறுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்து தனிச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும்.
அந்த நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும் வரை நீட் தேர்வு தொடரத்தான் செய்யும். எனவே, அதுவரை மாணவர்கள் நீட் தேர்வை எழுதவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், 25 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 61 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 7,157 இடங்கள் உள்ளன.
இதுமட்டுமல்லாமல், பல் மருத்துவப் படிப்புக்கு மாநில ஒதுக்கீட்டின் கீழ் 1,383 இடங்கள் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
இதன் பயனாக, இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 510 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பிலும், 104 மாணவர்களுக்கு பல் மருத்துவமான பி.டி.எஸ். படிப்பிலும் என 614 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இது முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் கிடைத்த இடங்கள் ஆகும். தற்போது 2-வது கட்ட கலந்தாய்வில், அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்களில் 800-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கூடுதலாக வந்திருக்கின்றன.
அந்த இடங்களிலும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மேலும் இடங்கள் கிடைக்க இருக்கின்றன. அந்தவகையில் 614 இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் கிடைத்த நிலையில், 2-வது கட்ட கலந்தாய்வு முடிவில் அதைவிட மேலும் சில இடங்களையும் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் அலங்கரிக்க இருக்கிறார்கள். ஆக, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு, பல அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான கனவு கோட்டையின் வாசலைத் திறந்துவைத்துள்ளது.