மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டசபை கூடுதல் செயலாளர் சீனிவாசன் நியமனம்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x

தமிழக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ம்தேதி தொடங்குகிறது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னை

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 24.7.2025 அன்று முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் கீழ்காணும் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது:-

1. தேர்தல் அறிவிக்கையை வெளியிடும் நாள் மற்றும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள் 2.6.2025 (திங்கட்கிழமை)

2. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 9.6.2025 (திங்கட்கிழமை)

3. வேட்பு மனுக்களைப் பரிசீலனை செய்யும் நாள் 10.6.2025 (செவ்வாய்க்கிழமை)

4. வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான கடைசி நாள் 12.6.2025 (வியாழக்கிழமை)

5. வாக்குப் பதிவு நாள் 19.6.2025 (வியாழக்கிழமை)

6. வாக்குப் பதிவு நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

7. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் 19.6.2025 (வியாழக்கிழமை) மாலை 5 மணி முதல்

8. தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் 23.6.2025 (திங்கட்கிழமை)

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் கூடுதல் செயலாளர் சீனிவாசன் தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் இணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது. வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 2.6.2025 முதல் 9.6.2025 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 7.6.2025 (பக்ரீத் பண்டிகை) மற்றும் 8.6.2025 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப் பதிவு, தேவைப்படின், "சட்டமன்ற குழுக்கள் அறையில்" 19.6.2025 அன்று நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story