சட்டசபையில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா

மொத்தமாக 170 மணி நேரம் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.
சட்டசபையில் அதிக கேள்விகளுக்கு பதில் அளித்த ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

தொடர்ந்து, 7, 10, 11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரியவில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. மொத்தம் 55 துறைகள் இருப்பதால், தினமும் 3, 4 துறைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

முக்கியமாக, கடந்த 3-ந் தேதி முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யின் கைவசம் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், சட்டசபையில் அனல் பறந்தது.

இந்த நிலையில், நேற்று முதல்-அமைச்சர் விஜய், மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று 11 சட்ட மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களாக நடைபெற்று வந்த சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.

இந்தநிலையில், சட்டப்பேரவை ஹைலட் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில்,

* சட்டபேரைவையில் 8 அரசினர் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரவையில் 14,399 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன

* அதிக கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் பதிலளித்துள்ளார். மானிய கோரிக்கைகள் மீது 165 எம்எல்ஏக்கள் உரையாற்றியுள்ளனர்.

* திமுக எம்எல்ஏக்கள் 23.35 மணிநேரமும், தவெக எம்எல்ஏக்கள் 13.28 மணிநேரமும், அதிமுக எம்எல்ஏக்கள் 12.58 மணி நேரமும் உரையாற்றியுள்ளனர்.

மொத்தமாக 170 மணி நேரம் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com