தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு சேர்வதற்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் நாளை முதல் மாணவர் சேர்க்கை
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2025-2026-ம் கல்வியாண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நாளை (மே 5) முதல் நடைபெற உள்ளது. இப்பள்ளியில் சேர்வதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதஸ்வரம், தேவாரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள் ஆகும். இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400 உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ மாணவிகளுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும் வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.

மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோயில்களில் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசைப் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.

ஆகவே கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு தலைமை ஆசிரியை, T-சவேரியார்புரம், சிலுவைபட்டி அஞ்சல், தூத்துக்குடி- 2 என்ற முகவரியிலும், 9487739296 என்ற கை பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com