வீடு புகுந்து அ.தி.மு.க. நிர்வாகியை கொல்ல முயற்சி

வருசநாடு அருகே வீடு புகுந்து அ.தி.மு.க. நிர்வாகியை கொலை செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வீடு புகுந்து அ.தி.மு.க. நிர்வாகியை கொல்ல முயற்சி
Published on

வருசநாடு அருகே உள்ள முருக்கோடை கிராமத்தை சேர்ந்தவர் முருக்கோடை ராமர். கடமலை-மயிலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர். மேலும் அ.தி.மு.க. நிர்வாகியாகவும் உள்ளார். சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில் இவர், வீட்டில் அமர்ந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. மின்சார தேவைக்கு வீட்டில் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த அவர் மீண்டும் கதவை திறந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் மெயின் சுவிட்ச் அணைக்கப்பட்டு இருந்தது. மேலும் நுழைவாயில் கதவும் திறந்த நிலையில் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் மெல்ல நுழைவு வாயில் கதவு அருகே சென்றார். அப்போது திடீரென இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் பின்புறமாக வந்து முருக்கோடைராமரின் கழுத்தில் கயிறை மாட்டி இறுக்கி கொலை செய்ய முயன்றார். சுதாரித்துக் கொண்ட அவர் மர்ம நபரை கீழே தள்ளிவிட்டு சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்தனர்.

இதனால் சுதாரித்து கொண்ட மர்ம நபர் வீட்டை விட்டு வேகமாக ஓடி சென்றார். பொதுமக்கள் சிலர் அவரை விரட்டி சென்றனர். ஆனால் வேகமாக ஓடிய அவர் தூரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வருசநாடு நோக்கி சென்று தலைமறைவானார். இதுகுறித்து முருக்கோடைராமர் வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து அவரை கொல்ல முயன்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com