3 ஆண்டுகளுக்கு பின் சென்னை-ஜெர்மனி இடையே தினசரி விமான சேவை தொடக்கம்

கொரோனா ஊரடங்கையொட்டி 3 ஆண்டுகளுக்கு பின்னர், சென்னை-ஜெர்மனி இடையே தினசரி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
3 ஆண்டுகளுக்கு பின் சென்னை-ஜெர்மனி இடையே தினசரி விமான சேவை தொடக்கம்
Published on

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகருக்கு 'லுப்தான்ஷா' ஏர்லைன்ஸ் விமானம் வாரந்தோறும் 5 நாட்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் அதிகமாக இருக்கிறது. லண்டன், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ, பாரிஸ், ரோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த விமானத்தை இணைப்பு விமானமாக பயன்படுத்துவதால் சென்னை-பிராங்பார்ட் இடையான விமானத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். இதனால் விமானத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பது பெரும் சவாலாக இருந்து வந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை இந்த விமான சேவை தினசரி விமான சேவையாக இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து சென்னை- பிராங்பர்ட் விமான சேவையை தினசரி விமானமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கைகளை ஏற்று நேற்று முதல் சென்னை-பிராங்பர்ட் இடையே தினசரி விமான சேவை மீண்டும் தொடங்கியது. அதன்படி, பிராங்க்பர்ட் நகரில் இருந்து புறப்படும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை வந்து அடைகிறது. அதே விமானம் மீண்டும் அதிகாலை 1:50 மணிக்கு சென்னையில் இருந்து பிராங்க்பார்ட் நகருக்கு புறப்பட்டு செல்கிறது.

3 ஆண்டுகளுக்கு பின்னர், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு தினசரி விமான சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com