

நிலக்கோட்டை,
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய ‘அக்னிபாத்’ ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்த பாலையா மகன் உதயகுமார் (வயது 21). இவர், அக்னிபாத் திட்டத்தின்கீழ் பெங்களூருவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் உதயகுமார், 14 வயது சிறுமியிடம் பழகினார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், அந்த சிறுமி கர்ப்பமானாள்.
இதுகுறித்து சிறுமி தரப்பில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் உதயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடினர். ஆனால் அவர் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தார்.
மேலும் உதயகுமாரை கைது செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் தலைமையில் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது உதயகுமார் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று, உதயகுமாரை கைது செய்தனர்.