தூத்துக்குடியில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க ஒப்பந்தம்

உலக விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவிற்கு முக்கிய பங்களிப்பாக விளங்கும்.
முதல்-அமைச்சர் .ச.ஜோசப் விஜய்
Published on

சென்னை,

தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) நிறுவனத்திற்கிடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜயிடம் காண்பித்து வாழ்த்து.

வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் .ச.ஜோசப் விஜய் இன்று (17.06.2026) தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் ச. கீர்த்தனா , தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன், ஆகியோர் சந்தித்து, கடந்த 11.6.2026 அன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இணைந்து தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் "விண்வெளி வாகனங்கள் பொது தொழில்நுட்ப வசதி மையம் (CTF)" அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (TIDCO) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் தா. கார்த்திகேயன், மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) நிறுவனம் சார்பில் அதன் இணை செயலாளர் அனுபம் ஆனந்த், ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், விண்வெளி துறை செயலாளர், விண்வெளி குழுத் தலைவர் மற்றும் இஸ்ரோ தலைவர் முனைவர் வி. நாராயணன்,இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) தலைவர் முனைவர் பவன் கோயங்கா ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடைபெற்ற 10-வது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) தொழில் மாநாட்டின்போது நடைபெற்றது.

மைல்கல்

இது, மாநிலத்தில், விண்வெளி உற்பத்திக்கான உலகத்தர சூழலை உருவாக்கும் முயற்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும். இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) நிறுவனம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வழங்கும். தமிழ்நாடு அரசு தேவைப்படும் நிலத்தை வழங்கி அதில் கட்டடங்கள், அடிப்படை வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தும்.

அதிநவீன சோதனை

இம்மையம், அதிர்வு, அதிர்ச்சி, வெப்ப-வெற்றிடம், மின் சார்ந்த குறுக்கீடு/ஒத்திசைவு, அழுத்தம் மற்றும் ஓட்டம், சோதனை, ஏவுகணை வாகன கூட்டமைப்பு, உதிரிப்பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ஹைட்ரோக்ளேவ் செயல்பாடுகள் ஆகியவற்றிற்கான அதிநவீன சோதனை மற்றும் தரநிலை உறுதிப்படுத்தும் வசதிகளை பயன்பாட்டிற்கு வழங்கும். இத்தகைய அதிக முதலீட்டுடன் அமைக்கப்படும் வசதிகள், தொழில்துறைக்கு விண்வெளி அமைப்புகள் மற்றும் உதிரிபாகங்கள் உருவாக்க, சோதிக்க, தரநிலை உறுதிப்படுத்த ஆகும் செலவையும் மற்றும் நேரத்தையும் குறைக்க உதவும்.

ஏவுகணை தளம்

குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்படவுள்ள ஏவுகணை தளம் அருகில் உருவாக்கப்படவுள்ள இந்த தொழிற்பூங்கா, ஏவுகணை வாகன கூறுகள், செயற்கைக்கோள் அமைப்புகள், இயக்க அமைப்புகள், வான்வழி மின்னணு அமைப்புகள், ஒருங்கிணைந்த பொருள் கட்டமைப்புகள் மற்றும் பிற முக்கிய விண்வெளி உபகரணங்களை உற்பத்தி செய்யும் மையமாக விளங்கும். இந்த வசதி, இத்தொழிற்சூழலின் முதுகெலும்பாக விளங்கி, நாடு முழுவதும் இந்த துறை சார்ந்த தொழில்களுக்கு உலகத் தர சேவைகளை பெற உதவும்.

முக்கிய பங்களிப்பு

இந்த கூட்டு முயற்சி, உலகத்தர தொழில் சூழல்களை உருவாக்கும் தமிழ்நாடு அரசின் நோக்கத்தையும், புதிய துறைகளுக்கான அதிநவீன அடிப்படை வசதிகள் மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை (Strategic Partnerships) ஏற்படுத்தும் முயற்சியையும் உறுதி செய்கிறது. இவ்வசதி, தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி விண்வெளி உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையமாக நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, உலக விண்வெளி உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்கும் கனவிற்கு முக்கிய பங்களிப்பாக விளங்கும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com