பெருந்துறை அருகே 200 அரங்குகளுடன் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முன்னிட்டு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெருந்துறை அருகே 200 அரங்குகளுடன் வேளாண் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
Published on

ஈரோடு,

தமிழ்நாடு அரசின் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதியில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடக்கிறது.இதன் தொடக்க விழா இன்று (புதன்கிழமை) மதியம் 12.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிடுகிறார். மேலும், விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முன்னிட்டு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் பந்தலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.அதைத்தொடர்ந்து அரசுத்துறை அரங்குகள் அமைக்கும் பந்தல், தனியார் அரங்குகள் அமைக்கும் பந்தல், வேளாண் எந்திர தளவாடங்களுக்கான அரங்கம் மற்றும் உணவுக்கூடம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சி அரங்கு, கரும்பு அரங்கு ஆகியவை அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 200 கண்காட்சி அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் 50 ஆயிரம் விவசாயிகள் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்கு அங்கேயே உணவு வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 விவசாயிகள் தவிர பொதுமக்கள், கட்சியினர் என பல ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட உள்ளனர். இன்று (புதன்கிழமை) மதியத்துக்கு மேல் கருத்தரங்கம் தொடங்கும். நாளை (வியாழக்கிழமை) காலை முதல் மாலை வரை கண்காட்சியும், கருத்தரங்கும் தொடர்ந்து நடைபெறும். வேளாண் கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் விஜயமங்கலம் வருகை தருகிறார். விழா முடிந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சேலம் மாவட்டம் மேட்டூர் செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு விஜயமங்கலம் முதல் நெரிஞ்சிபேட்டை வரை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், கோவை சரக டி.ஐ.ஜி. சசிமோகன் ஆகியோர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com