வேளாண் பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கு நடந்த நுழைவுத் தேர்வு ரத்து - மாணவர்கள் அதிர்ச்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கோவை,

கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், முதுநிலை வேளாண் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை ஏராளமான மாணவர்கள் எழுதி, முதுநிலை படிப்பில் சேருவதற்காக காத்திருந்தனர். இந்த நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்களின் இ-மெயில் முகவரிக்கு நேற்று இரவு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இ-மெயிலில், ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். 2024-2025-ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை மாணவர்கள் சேர்க்கை நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சாப்ட்வேர் பிரச்சினை காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் சேர்க்கையில் தாமதம் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com