அதிமுக 55-வது ஆண்டு தொடக்க நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க தலைமைக் கழகம் அறிவுறுத்தல்

அதிமுக தொடக்க நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

கழக நிறுவனத் தலைவர், 'பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" 17.10.2026 - சனிக்கிழமையன்று 55-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் அன்று காலை 10.30 மணியளவில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துவார். அதனைத் தொடர்ந்து கழகக் கொடியினை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதே போல், கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்ட அளவில் ஆங்காங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூசியும்; கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து, கழகக் கொடியினை ஏற்றி வைத்தும்; நம் இருபெரும் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கியும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்வதோடு, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கழகத்தின் தொடக்க நாளை எழுச்சியுடன் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com