

கோவை,
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்து விட்டு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் பூமார்கெட் பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் தங்கள் குறைகளை அவரிடம் பட்டியலிட்டனர். இதில் குறிப்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் சாலைகள் முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும், சாக்கடை நிறைந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெலுங்கு மொழியில் குறைகளை தெரிவித்தார்.
அவர் கூறிய குறைகளை பொறுமையாக கேட்டறிந்த அம்மன் அர்ஜூனன், தெலுங்கு மொழியிலேயே பேசி குறைகளுக்கு நிச்சயம் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். மேலும் தேர்தல் முடிந்ததும் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்து தரப்படும் என்று கூறி ஆதரவு திரட்டினார். மேலும் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.