தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு? - இன்று அவசர ஆலோசனை

தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படுகிறது.
தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு? - இன்று அவசர ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் த.வெ.க. அதிகபட்சமாக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் த.வெ.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று, கவர்னர் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் 108 என்ற எண்ணிக்கையுடன் அதைச் சாத்தியப்படுத்துவது கடினம். மேலும், சட்டசபையில் த.வெ.க.வைச் சேர்ந்த ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவரின் மூலம் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை வாக்கெடுப்பும் நடைபெறும்.

இதில் சபாநாயகருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது. மேலும், த.வெ.க. தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால், ஒன்றை மட்டும் வைத்துக்கொள்ள முடியும்; இதனால் ஒரு தொகுதியை த.வெ.க. இழக்கும். எனவே த.வெ.க.வுக்கு சட்டசபையில் 106 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும். பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படும்.

தனித்து போட்டியிட்டதால் த.வெ.க.வுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லை. எனவே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவளித்தால் மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். த.வெ.க. வெளிப்படையாக எந்த கட்சியிடமும் ஆதரவு கோரவில்லை என்றாலும், பின்னணியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய அரசியல் நிலவரப்படி, தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸ், த.வெ.க.வுக்கு ஆதரவு தர வாய்ப்பு அதிகம். ஏனெனில் காங்கிரசின் ஒரு பிரிவு முன்பே த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அது நடக்கவில்லை. மேலும் த.வெ.க. வெற்றிக்குப்பின் ராகுல் காந்தி, விஜய்க்கு தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அ.தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள கட்சிகளையும் இணைக்க வேண்டிய நிலை த.வெ.க.வுக்கு உள்ளது. அதில் 4 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள பா.ம.க., த.வெ.க.வுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருப்பதாக தெரிகிறது. எனவே எந்த நேரத்திலும் அன்புமணி ராமதாஸ்-விஜய் சந்திப்பு நிகழலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி ஆட்சிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே த.வெ.க.வுடன் சேர்ந்தால் அமைச்சரவை பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அந்த கட்சிகளிடம் எல்லாம் உள்ளது. எனவே அமைச்சர் பதவி இல்லாமல் இந்த கட்சிகள் த.வெ.க.வுடன் இணைய வாய்ப்பு மிக குறைவு. இவ்வாறு கூட்டணி கட்சிக ளுக்கு பதவி வழங்கப்பட்டால், தமிழக அரசியலில் இது ஒரு புதிய தொடக்கமாக இருக்கும்.

இதனிடையே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இந்த தேர்தலில் எதிர்க்கட்சித் அந்தஸ்தை இழந்ததுடன், மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.

எனவே அரசியலில் தங்களது நிலையை வலுப்படுத்தவும், மக்களுக்கான பணிகளை தொடரவும் விஜய்க்கு ஒரு ஆண்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கலாம் என்ற கருத்தும் அந்த கட்சிக்குள் நிலவுகிறது. ஒருவேளை அ.தி.மு.க. ஆதரவு அளித்தால் த.வெ.க. மற்ற கட்சிகளின் ஆதரவு எதுவும் தேவைப்படாது. அதே நேரத்தில் த.வெ.க.வும் யாருக்கும் ஆட்சியில் பங்கு தரதேவையில்லை. சுயமாகவே ஆட்சியை நடத்தலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com