அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு ஜனவரி 9-ந்தேதி கூடுகிறது: 4 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுரை

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு ஜனவரி 9-ந்தேதி கூடுகிறது.
அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு ஜனவரி 9-ந்தேதி கூடுகிறது: 4 ஆயிரம் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுரை
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க. செயற்குழு-பொதுக்குழு ஜனவரி 9-ந்தேதி கூடுகிறது. இதில், பங்கேற்க இருக்கும் 4 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்டவேண்டும் என்று விதி இருக்கிறது. அதன் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 27-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

பரபரப்பான அரசியல்சூழ்நிலைகளுக்கு மத்தியில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முடிவு எடுப்பதற்காக நேற்று முன்தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை ஜனவரி 9-ந்தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள 4 ஆயிரம் பேருக்கு விரைவில் அழைப்பிதழ் அனுப்பப்பட இருக்கிறது. கொரோனா காலக்கட்டத்தில் கூட்டம் நடைபெறுவதால், முன்எச்சரிக்கையுடனும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 9-1-2021 சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும்.

கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழோடும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு ஒப்புதல் பெறப்பட இருக்கிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க. மகத்தான வெற்றிபெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம் தான் இப்பிரசார பொதுக்கூட்டம். இதில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com