

சென்னை,
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெ ரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களை பெற்றது. அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களை பெற்றது. தி.மு.க. தனித்து 60 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று உள்ளது. தனியாக 47 இடங்களை மட்டும் பெற்ற அ.தி.மு.க.வுக்கு இந்த முறை மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.
கடந்த கால தேர்தலில் எல்லாம் ஒன்று ஆட்சி, அல்லது இரண்டாம் இடத்தை பிடித்து வந்த அ.தி.மு.க. முதல் முறையாக 3-ம் இடத்திற்கு சென்று விட்டது. சுமார் 50 ஆண்டுகாலமாகத் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த அ.தி.மு.க. முதல்முறையாகத் தனது "முக்கிய எதிர்க்கட்சி” என்ற அந்தஸ்தை இழந்து மூன்றாவது இடத்திற்குச் சரிந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை. அ.தி.மு.கவின் பாரம்பரிய வாக்கு வங்கியான இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., த.வெ.க. மற்றும் அ.தி.மு.க. என மும்முனைப் போட்டி நிலவியதால், அ.தி.மு.க-வின் கோட்டைகளாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் கூட அந்த கட்சி சரிந்து இருக்கிறது. த.வெ.க.வின் வருகையால் "வாக்குகள் பிரிப்பு" என்ற காரணத்தால் அ.தி.மு.க.வின் 'கிராமப்புற மற்றும் பெண்கள்' வாக்கு வங்கியை நேரடியாகப் பாதித்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். தேர்தலில் 3-வது இடத்துக்கு சென்றது, அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளார்.