சட்டமன்றத்தில் மீண்டும் இரு பிரிவுகளாக செயல்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யும் போது எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர், ராகேஷ் வெளிநடப்பு செய்யவில்லை
சட்டமன்றத்தில் மீண்டும் இரு பிரிவுகளாக செயல்படும் அதிமுக எம்.எல்.ஏக்கள்
Published on

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தேர்தல் தோல்வியால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். சட்டமன்றத்தில், நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெகவுக்கு ஆதரவாக 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதையடுத்து சமரசம் ஏற்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் திரும்பினர்.

எனினும், சிவி சண்முகம் மட்டும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 5 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். இவ்வாறாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு அரங்கேறி வரும் நிலையில்,இன்று சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்யும் போது எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ரவி மனோகர், ராகேஷ் வெளிநடப்பு செய்யவில்லை இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் இரு பிரிவாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

அதிமுக வெளிநடப்பு ஏன்?

மேகேதாட்டு விவகாரம் தொடர்பான உரிமை மீறல் பிரச்சினையில் பேச அனுமதி அளிக்காத காரணத்தால் இன்று சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழக சட்டப்பேரவை விதி 220-ன் கீழ் அதிமுக சார்பாக ஒரு உரிமை பிரச்சினையை அவைக்கு கொண்டுவர அனுமதி கேட்டோம். மேகேதாட்டு தனித் தீர்மானத்தில் இடைச்செருகல் திருத்தம் செய்ததை அவை கவனத்துக்கு கொண்டுவருவது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தோம். சபாநாயகர் ஜீரோ ஹவரில் இதுபற்றி பேச அனுமதிக்காத காரணத்தால், நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

முன்மொழிய வேண்டும்

மேகேதாட்டு விவகாரத்தில் ஜூன் 18 அன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வரைவு தீர்மானத்தை மட்டும் அதிமுக சார்பில் ஆதரித்தோம். ஜூன் 19ஆம் தேதி சட்டப்பேரவை விதி 104ன் படி முன்மொழியப் படாத, இடைச்செருகல் சேர்க்கப்பட்ட திருத்திய தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. பேரவை விதி 104-ன் கீழ் உறுப்பினர்களுக்கு அனுப்பிய வரைவு தீர்மானத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டுமானால், அரசின் சார்பான திருத்தங்கள் முறையாக அவைக்கு தெரிவிக்கப்பட்டு வரைவில் உள்ள தீர்மானத்துக்கு பதிலாக திருத்தப்பட்ட தனித் தீர்மானத்தை மொழிவதற்கு சபாநாயகரின் அனுமதி பெற்று, திருத்தப்பட்ட தீர்மானத்தை பேரவையில் முன்மொழிய வேண்டும். இதனையே சட்டப்பேரவையில் உரிமை மீறல் பிரச்சினையாகக் கொண்டு வந்தோம்.

விதிகளுக்கு புறம்பாக

விதிகளுக்கு புறம்பாக திருத்தத்தை முதல்வரின் பதில் உரையில் சேர்த்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு தனித் தீர்மானம் ஜூன் 18ல் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதன்பின்னர் விவாதம் நடைபெற்றது. பிறகு முதல்வரின் பதிலுரையில் இந்த இடைச்செருகல் திருத்தத்தை சேர்த்துள்ளார்கள். எனவே, விதிகளின் படி அவர்கள் இந்த தீர்மானத்தை கொண்டுவரவில்லை என்பதை தெரிவிக்கவே நாங்கள் இந்த உரிமை மீறல் பிரச்சினையை கொண்டுவந்தோம். அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்பதால் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com