

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 47 பேர் வெற்றிப்பெற்றுள்ளனர். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிப்பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இதனால் தங்களுக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு அ.தி.மு.க.வை மீண்டும் இரண்டாக உடைத்து அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்களை கொத்தாக தூக்கி வந்து விடலாம் என்று த.வெ.க. சார்பில் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
இதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத் தில் தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு முயற்சி செய்து வருவதாகவும் அதற்காகவே எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பரபரப்பான தகவல்கள் வெளிவந்தது. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நிலைப்பாடு வரும் வரை எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் தங்கியிருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரியில் தங்கவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க விசிகவிடம் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அதிமுக எல்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபட உள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.