

சென்னை,
அ.தி.மு.க.வை ஒன்றிணைக்கும் நோக்கில் அக்கட்சியின் இரு தரப்பினரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து சி.வி.சண்முகம் இல்லத்தில் இருந்து எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இன்று புறப்பட்டனர். பறித்த கட்சி பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதாக தகவல் வெளியானது. எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கினர்.
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்குப் பிறகு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்ததையும் வாபஸ் பெறுவதாக கடிதம் அளித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்துக்கு ஒன்றாக சென்றனர். அதேபோல, கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தையும் திரும்ப பெற்றனர். ஒரே அணியாக இருப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் வழங்கினர். அதேபோல, அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரியும் சபாநாயகரிடம் மனு அளித்தனர்.
அவ்வாறு மனுக்கள் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவர் பெயரை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வாசித்து அவர்கள் வந்திருக்கிறார்களா? என்பதை உறுதி செய்தார்.
ஆனால் சி.வி.சண்முகம் மட்டும் நேரில் செல்லவில்லை என கூறப்படுகிறது. அவருடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த விவரங்களும் தெரியவரவில்லை.
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது மனுக்களை வாபஸ் பெற்று ஒன்றிணைந்த நிலையில், முடிவை இன்று (வியாழக்கிழமை) அறிவிப்பதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தகுதிநீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளும் என்னிடம் மனு அளித்துள்ளனர். அவற்றை படித்து பார்த்து, ஆய்வு செய்து நாளை (அதாவது இன்று) காலை முறையான அறிவிப்பை வெளியிடுவேன்” என்று ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சி.வி.சண்முகம் வர மறுத்ததாக கூறப்படுகிறது. அவரை தங்கமணி நேரில் சென்று சமாதானப்படுத்தினார். பின்னர் எம்.ஆர்.சி. நகரில் உள்ள வீட்டுக்கு சி.வி.சண்முகத்தை ஒரே காரில் அவர் அழைத்து வந்தார். அங்கு எஸ்.பி.வேலுமணியும், மற்ற எம்.எல்.ஏ.க்களும் வந்தனர். சி.வி.சண்முகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். அ.தி.மு.க.வில் அவரும் ஒன்றிணைந்திருப்பதாக எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பேச்சுவார்த்தை முடிந்தபின் சி.வி.சண்முகம் வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, 'தற்போது நான் எதுவும் பேச விரும்பவில்லை' எனக்கூறி எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி அவர் கோபத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைய விருப்பம் இல்லாமல் மறுத்ததாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகத்திடம் தொடர்ந்து வேலுமணி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வில் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த மற்ற அனைவரும் இணைந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு என்னவென்று அவர் அறிவிக்காமல் இருக்கிறார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார். சி.வி.சண்முகத்துடன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அவரது ஆதரவாளர்களான 18 ஒன்றிய செயலாளர்கள், 3 நகர செயலாளர்கள், 4 பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர். சார்பு அணிகளின் நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்களுடன், கட்சியின் எதிர்கால நலன் கருதி எடப்பாடி பழனிசாமி அணியுடன் சேரலாமா அல்லது த.வெ.க.வில் இணையலாமா என்பது குறித்து சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட சில மூத்த நிர்வாகிகள், சி.வி.சண்முகத்தை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க கூடாது, சேர்த்தால் நாங்கள் வெளியேறுவோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.