

சென்னை,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள குளிர்கால விமான சேவைகள் அட்டவணையில், சென்னை விமான நிலையம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பையும், விமான பயணிகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், இந்த புதிய அட்டவணை கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து துபாய், இலங்கை, சார்ஜா, தமாம், கோலாலம்பூர் உள்ளிட்ட முக்கிய சர்வதேச விமான நிலையங்களுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது சேவைகளை மீண்டும் தொடங்கவில்லை.
சர்வதேச விமான சேவைகள் மட்டுமின்றி, சென்னையில் இருந்து அந்தமான், திருவனந்தபுரம், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு நகரங்களுக்கான விமான சேவைகளும் மீண்டும் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு உள்ளன.
விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பில், சென்னை - சிங்கப்பூர் இடையேயான விமான சேவை மட்டும் தொடங்கிறது. மேலும், பெங்களூர் - கோவை மற்றும் பெங்களூர் - மதுரை ஆகிய விமான சேவைகளும் வருகிற 25-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.