

மதுரை,
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், ஆட்சியர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, மதுரை அவனியாபுரத்தில்
ஜல்லிக்கட்டு போட்டிகள் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறும். பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஓர் இடத்தில் கலந்து கொண்டால் மற்றோர் இடத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வழங்கப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வருகிற 16ந்தேதி ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால், ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், திட்டமிடப்பட்ட 16ந்தேதிக்கு பதிலாக அதற்கு அடுத்த நாளான 17ந்தேதி நடைபெறும்.
அலங்காநல்லூர் விழா குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.